30 நவம்பர் 2015

விடை தருவார் யாரோ?

 துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

விடுதலை தேடிய விழிகளில் ஏக்கம்
விரைந்தழிந்து ஒழிந்திடுமோ?
தமதுயிர் மண்ணில் விதைத்தவர் உணர்வு
சடுதியில் கனவாய் அழிந்திடுமோ?

இடிந்தது கோட்டை முடிந்தது வாழ்வென
அனைத்துமே ஒருபிடி சாம்பலாய் மாறிடுமா?
சிலிர்ப்புடன் எழுந்திட்ட இலட்சிய பேரணி
இடை நடுவில் துவண்டு இறந்திடுமோ?

எமதுயிர்ப்பான இளைஞர்கள் உயிரது
மண்ணோடு மண்ணாய் போய் விடுமோ?
ஈழத்தாயவள் என்றொரு சொல்லுக்கு
ஈமக்கிரியைகள் நடந்திடுமோ?

மரணத்தை நேசித்த மாவீரர் விதைத்தவை
வீணாய் மண்ணில் போய் விடுமோ?
விலை மதிப்பில்லா உயிரின் மதிப்பது
வீம்பாய் போரிட்டு அழிந்திடுமோ?

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும் !

கனவுகள் சிதைந்து காற்றிலே மிதந்து
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோன்றும்!

பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!

விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!

எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!

ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தைகள் பிறக்கும்!

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

11 கருத்துகள்:

  1. வலி நிறைந்த கவிதை அக்கா...
    ஓவ்வொரு பத்தியிலும் ஈழத் தமிழர்களின் வலியும்... நிலையும்...ஏக்கமுமாய்....

    ஆறடி நிலம் கூட வாடகையே என்ற வார்த்தைகள் எத்தனை உண்மையானவை...

    வலியோடு வாசித்தேன் அக்கா...

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க வைக்கும் வரிகள்...

    பதிலளிநீக்கு
  3. உயிரோட்டமுள்ள கணத்த வேதனை மிகுந்த வரிகள்

    பதிலளிநீக்கு
  4. வலி வரிகள்.

    சீக்கிரம் நல்லகாலம் பிறக்க வேண்டும் என்றுதான் ஆண்டாண்டு காலமாய்ப் பிரார்த்தனை செய்து வருகிறோம். என்று விடியும்?

    பதிலளிநீக்கு
  5. விழிகள் நனைக்கும் வரிகள்,

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அற்புதம்...
    உணர்வில் ஊறித் ததும்பும் வார்த்தைகள்
    கவிதைக்கு உன்னதம் கூட்டிப் போகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. வலிகள் நிறம்பிய வரிகளாக உள்ளது படித்து முடிக்கையில் மனது கனத்துத்தான் போகிறது இதற்கு முடிவு என்றுதான் கிட்டுமோ
    அனைத்தும் அறிந்த அவனே
    வாழ்த்துக்கள் அக்கா
    வரிகள் அனைத்தும்
    கண்ணீர் துளிகள்

    பதிலளிநீக்கு
  8. மனதின் வலி வரிகளில் தெரிகின்றது....காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. இன்றுதான் முதன்முதலாக தங்களின் வலைத்தளம் பார்த்தேன். அனுபவம் மிக்க பதிவர்களை போல் நேர்த்தியான வலைப்பூ வடிவமைப்பு, நீண்ட நாள் நட்பைப்போல் கருத்திடும் தங்களின் பின்னூட்டம் அனைத்தும் அருமை.

    இந்தக் கவிதையும் அருமை.

    தொடருங்கள்! நானும் தொடர்கிறேன்.
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நிஷா !

    ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
    இழந்த அவஸ்தை எங்கே புரியும்
    அகதியின் துயரதை கூறுவதென்றால்
    ஆயிரம் வார்த்தைகள் பிறக்கும்!

    ஆழமான உணர்வுகள் அடிநேன்சில் இருந்து பிறந்திருக்கின்றன ம்ம்
    காலம் வெல்லும் அதுவரை கடமைகளைச் செய்வோம் !
    நன்றி வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. வலிகள் நிறைந்த தற்காலம்...
    கவலை வேண்டாம் விடுதலை தாகம்
    என்றும் தனியாது

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!